பனிச்சறுக்கு -ஆர்டென்ஸ், பெல்ஜியம் (Skiing – Ardennes, Belgium)

எங்கு காணினும் வெண்மையடி!
அது எல்லைகளற்ற வெளியடி!

பசுமை மறந்த மரங்களினூடே!பனிப்பூக்கள் மிதப்பதைக் கண்டேனடி!

காய் கனிகளற்ற மரங்களின்பால்
கண்குளிர்க் கவர்ச்சியைக் கண்டேனடி!

ஆச்சரியங்கள் அனைத்தையும் அகத்தே
கொண்ட அற்புதமடி இந்த ‘ஆர்டென்ஸ்’!

பனிச்சறுக்கு உபகரணங்களை வாடகைக்கு எடுக்க வரிசையில் நிற்கையிலேயே கைகால் விரல்கள் விரைத்து மரத்துப்போயின.

இந்த விரைகுளிரில் நாம் எங்கே மகிழ்ந்து அனுபவிக்கப் போகிறோம் என்ற மனநிலை தொற்றிக்கொண்டது.

ஒரு வழியாக உபகரணங்களை வாங்கிக்கொண்டு தொடங்கும் இடத்திற்கு சென்று எப்படி அணிவது என்பதை ஒரு 10 வயது மதிக்கத்தக்க சிறுவனைப் பார்த்து கற்றுக் கொண்டு அணிந்து கொண்டோம்.

அணிந்து இரண்டடி எடுத்து வைப்பதற்குள் பொத்தென்று விழுந்து ஓ-வென அலறுவதற்கு பதில் ஹாஹா-வென உரக்க சிரித்து மீண்டெழுந்து மறுமுறை விழுந்து உரக்க சிரிக்க, இப்படியே 5,6 முறை நிகழ்ந்திருக்கும்.

தொடர் முயற்சிகளின் பயனாய், நிலைபெறக் கற்றுக்கொண்டு நகரவும் செய்தாயிற்று.ஆனால் விழுந்தெழுவது மட்டும் நிற்கவேயில்லை.

வனப்பகுதியை நெருங்கியதும் திசைகாட்டிகள் பொருத்தப் பட்டிருந்தன. அவைகள் பச்சை, நீலம் மற்றும் சிவப்பு முறையே எளிமை, சற்று கடினம் மற்றும் கடினம் ஆகியவற்றைக் குறித்தன.

அவற்றில் பச்சை வழியை தேர்ந்தெடுத்து பயணிக்கலானோம்.

பாதைகளில் படர்ந்த குழைபனியானது கிட்டத்தட்ட ஒரு அடி உயரம் இருந்திருக்கும். அதுவே மரங்களினூடே 2 முதல் 3 அடி வரை இருந்திருக்கலாம்.

வெறும் காலில் நடப்பதை விட, பனிச்சறுக்கு உபகரணத்துடன் நடப்பது சற்று எளிதாகவும், முதன்முறையாதலால் ஆர்வமிகுதியும் இருந்தது.

அடர்ந்த வனப்பகுதியில் நுழைந்தவுடன் சூழலில் கதகதப்பை உணர்ந்தோம். தொடக்கத்தில் விரைத்த விரல்கள் சற்று தளர்ந்து இலகுவாயின. உடல் வெப்பநிலையும் சீராயிற்று.

இந்த கதகதப்பானது வெகு நேரம் நிலைக்கவில்லை. வனப்பகுதியை விடுத்து திறந்த வெளியில் பிரவேசிக்கும்போது மீண்டும் விரைக்க ஆரம்பித்துவிட்டது.

வழி நெடுகிலும் பலதரப்பட்ட மக்கள் தத்தம் குடும்ப சகிதங்களுடனும், சிறு குழந்தைகளுடனும், செல்லப் பிராணிகளுடனும் மற்றும் தோழமை சகிதங்களும், வயதான தம்பதியர்களும் தங்கள் வார இறுதி நாளான அன்று மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

எதிர்ப்படும் அனைவரும் ஒருவருக்கொருவர் புன்முறுவல் பூத்து முகமன் செய்து கொண்டனர்.

இவ்வாறாக 10 முதல் 12 கி.மீ பயணித்திருப்போம். குறிப்பாக சிறிதும் தளர்வில்லாமல்.

கடைசியாக பயணத்தை நீலநிற வழியில் முடித்தபோது நிறைமனதுடன் முழுதாய் அனுபவித்த மகிழ்ச்சி உண்டாயிற்று.

வழிநெடுகிலும் சிறுகுப்பைகளையும் காணவில்லை.

அவ்வளவு தூய்மையாக ரம்மியமாய்க் காட்சியளிக்கிறது “ஆர்டென்ஸ்”.

2 thoughts on “பனிச்சறுக்கு -ஆர்டென்ஸ், பெல்ஜியம் (Skiing – Ardennes, Belgium)

Leave a reply to Dhanapal Cancel reply